தமிழர்களின் விடுதலை உணர்வை இல்லாமல் செய்வதோடு, விடுதலை தொடர்பான எவ்வித கோரிக்கையும் தமிழர்களிடம் இருந்து ஒருமித்து வரக்கூடாது என்பதில் அரசாங்கம் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றதென, வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
எம்மிடம் ஆயுத ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அல்லது நாம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாம் ஜனநாயக ரீதியாகவேனும் போராடுவதற்கு தளம் தேவை என்பதன் அடிப்படையில்தான் நாங்கள் மாகாணசபையை ஏற்றுக்கொண்டோம்.
மாகாணசபையில் இருக்கக்கூடிய குறை நிறைகள் பற்றி சர்வதேச ரீதியாக குரல்கொடுக்ககூடிய நேர்மையான முதலமைச்சர் உள்ளமைதான் எமக்கு இப்போது இருக்கக்கூடிய ஒரேயொரு பலம்.
மாகாணசபையில் இருப்பவர்கள் அரசியல் பேசவேண்டாம் என சொல்வார்கள். மாகாணசபை என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இனப்பிரச்சனைக்கு தீர்வாக எவ்வளவோ போராட்டங்கள் நடந்ததன் பின்னர் உருவாக்கப்பட்டதாகும். இந்த மாகாண சபையை விடுதலைப்புலிகள் மாத்திரமல்ல, வேறு பல விடுதலை அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணம் இதனை நடைமுறைப்படுத்தும்போது இருக்கக்கூடிய சிரமங்களேயாகும்.
அரசியல் ரீதியாக நிர்க்கதியாகவே இன்றைய நிலையில் வந்து நிற்கின்றோம். எதிர்காலம் குறித்த நம்பிக்கை எதுவும் எங்களிடம் இல்லை. நடக்கும் நடக்குமென காத்திருந்து கடைசியில் எதுவுமே இல்லாமல் எங்களிடம் இருக்கக்கூடிய விடுதலை உணர்வுகூட இல்லாமலாக்கப்பட்டு, எங்களை சிதறடித்து, எங்களிடம் இருக்கக்கூடிய ஒற்றுமையை இல்லாமல் செய்து, இன்னுமொரு தடவை ஒருமித்த குரலில் தமிழர்களிடம் இருந்து விடுதலை தொடர்பான எவ்வித கோரிக்கையும் தங்களிடம் வரக்கூடாது என்பதில் இந்த அரசாங்கம் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. எனினும் இவற்றையெல்லாம் முறியடித்து எங்கள் சக்திக்கு உட்பட்டு எங்களால் செய்யக்கூடிய அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்றார்.