விடுதலைக்கு முன்னர் பக்கசார்பற்ற விசாரணையே வேண்டும்! : சட்ட மாணவ சங்கம்

அரசியல் கைதிகள் விடயத்தில் துரிதமான பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசியல் கைதிகளின் துரித விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவ சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்துள்ள போதிலும், ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்த போக்கினையே பின்பற்றிவருகிறது.

இது நாட்டின் நல்லாட்சியினையும் குறிப்பாக சட்டவாட்டாசியின் பொறுப்புக்கூறும் தன்மையினையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆட்சியில் உள்ள அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் பேசினாலும், அரசியல் கைதிகளின் நீதிவிசாரணையில் கடும் இனவாதத்தையும் பேரினவாதபோக்கையுமே வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை என்ற பதத்தினைவிட அவர்களுக்கான துரிதமான பக்கசார்பற்ற விசாரணையே அவசியமானதாகும்.

அந்தவகையில், அரசியல் கைதிகளின் விசாரனைகளை இலங்கை அரசாங்கம் துரிதமான முறையில் ஆரம்பித்து உரிய தீர்வினை எவ்வித இழுத்தடிப்புமின்றி வழங்க வேண்டும். அதுவரை நியாயமான முறையில் சட்டமாணவர் சங்கத்தின் போரட்டம் தொடரும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts