விஜய் ரசிகர்களை துள்ளி குதிக்க வைக்கும் பைரவா பாடல்கள்

தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பைரவா’. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன், மீண்டும் விஜய்யை வைத்து இயக்கியுள்ளார். இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ளது. அழகிய தமிழ் மகன் போன்றே பைரவா படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே பைரவா படத்தின் பாடல்கள் எந்தவொரு விழாவும் இன்றி நேரடியாக கடைகளிலும், இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவு, வர்தா புயல் பாதிப்பு போன்ற காரணங்களால் பைரவா படத்தின் பாடல்களை விழாவாக எடுத்து கொண்டாட விஜய் மறுத்துவிட்டார். இதனால் எந்த ஒரு ஆர்ப்பாட்டமின்றி பைரவா பாடல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. இதில் நான்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார், ஒரு பாடலை ‛கபாலி’ புகழ் அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைப்பில் வெளியாகியுள்ள பைரவா பாடல்கள் தற்போது இணையதளங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் பைரவா பாடல்களை கொண்டாடி வருகின்றனர்.

பைரவா பாடல்கள் விபரம்…

01. பட்டையை கிளப்பு…. என்ற பாடலை அனந்து பாடியிருக்கிறார். ரசிகர்களை துள்ளி குதிக்க வைக்கிறது இந்த பட்டையை கிளப்பு பாடல்.

02. நில்லாயோ…. என்ற பாடலை ஹரிச்சரண் பாடியிருக்கிறார். காதல் பாடலாக மெலோடி பாடலாக உருவாகியிருக்கிறது.

03. அழகிய சூடான பூவே…. என்ற பாடலை விஜய் நரேன், தர்ஷனா பாடியிருக்கிறார்கள். கொஞ்சம் வெஸ்டர்ன் கலந்து இந்த பாடல் உருவாகியுள்ளது.

04. பாப்பா… பாப்பா… என்ற பாடலை விஜய்யே பாடியிருக்கிறார். வழக்கம் போல ரசிகர்களை ஆட வைக்கும்படி இந்த பாடல் அமைந்துள்ளது.

05. வரலாம் வரலாம் வா பைரவா… என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் பாடியிருக்கிறார். ஏற்கனவே டீசரில் வெளியான பாடல் என்பதால் இந்தப்பாடலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Posts