1970 மற்றும் 80களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார். பிறகு இந்தி படங்களில் நடிக்க மும்பை சென்று பாலிவுட்டிலும் கலக்கி அங்கேயே செட்டில் ஆனார்.
தமிழ் படங்களில் நடித்து 20 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ஸ்ரீதேவி தமிழில் களமிறங்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் தற்போது ஸ்ரீதேவி நடித்து வருகிறார். இதில் விஜய் கதாநாயகனாவும், ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகியோர் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் விஜய், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்ட பாடல் காட்சிகளை படமாக்கினார்கள்.
இது பற்றி ஸ்ரீதேவி கூறும்போது, நான் தமிழ் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளேன். குழந்தை நட்சத்திரமாக முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்தது மீண்டும் நினைவுக்கு வருகிறது. எப்போதும் எனக்கு கொடுத்து வரும் அன்பும் அரவணைப்பிற்கும் சென்னைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் செய்யும் வேலைகள் என் கவனத்தை மிகவும் ஈர்க்கிறது. இவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.