விஜய் படத்தில் ஜோதிகா நடிக்கவில்லையாம்!

தமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்த சில குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜீத் நடித்த வாலி படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதில் சந்திரமுகி, மொழி உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு பெருமை சேர்க்கும் படங்களாக அமைந்தன. திருமணத்திற்கு பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தில் மறுபிரவேசம் செய்தார்.

அதையடுத்து இப்போது குற்றம் கடிதல் பட டைரக்டர் பிரம்மா இயக்கும் மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா போன்ற மாஜி ஹீரோயினிகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில், இந்த படத்திற்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61-வது படத்தில் ஜோதிகாவும் நடிப்பதாக கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் செய்தி பரவி வந்தது.

ஏற்கனவே விஜய் படத்தில் காஜல்அகர்வால், சமந்தா இருவரும் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இன்னொரு முக்கியமான வேடத்தில் ஜோதிகா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த செய்தியை விஜய் படக்குழு திட்ட வட்டமாக மறுத்துள்ளது. விஜய் படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இப்படியொரு செய்தியை யாரோ வதந்தி பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்கள்.

Related Posts