விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலகலா?

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில், ஜோதிகா இப்படத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலாவி வருகிறது. இதில் ஜோதிகா தனது கதாபாத்திரத்திற்கு வலு இல்லாததை அறிந்து, தனது கதாபாத்திரத்திற்கு சில மாறுதல்கள் தரும்படி இயக்குனரிடம் கேட்டதாகவும், அதற்கு இயக்குனர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இந்த காரணத்தினால் ஜோதிகா அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிலும் ஜோதிகா கலந்துகொள்ளாததும் சினிமா வட்டாரங்களில் ஒருவித சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாமலேயே இந்தமாதிரி சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இருப்பினும், இதுகுறித்து படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.

Related Posts