விஜய்க்கு போட்டி இனி நான் தான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் ‘நையப்புடை’ படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக பிரதான வேடமேற்று நடிக்க, பா.விஜய். சாந்தினி, உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுகவிழா சென்னையில் நடந்தது.

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘‘இப்படத்தில் என்னை வைத்து விஜயகிரண் ஆக்ஷன் செய்ய வைத்துள்ளார். காமெடி செய்ய வைத்துள்ளார்., நடனம் ஆடவைத்துள்ளார், குழந்தைகளோடு வயது மறந்து நடிக்க வைத்துள்ளார். இப்படி திறமையாக வேலை வாங்கினார் விஜயகிரண். விஜய் நடிக்க விரும்பிய போது நடிகராவது சுலபமல்ல, நடிகராக ஆசைப் பட்டால் போதாது. முதலில் அதற்குத் தகுதியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். காலை 4.30 மணிக்கு எழுப்பி ஜாக்குவார் தங்கத்துடன் பீச் போவோம். குதிரையில் தாவி ஏற வைப்போம். குதிரை மீது ஏறி நின்று தள்ளிவிட்டு தாவி கடலில் குதிக்க வைப்போம்.

நடிகராக முதல் தகுதி ஆக்ஷன் செய்ய வேண்டும் குழந்தைகளும் விரும்ப வேண்டுமென்றால் நடனம் ஆடத் தெரியவேண்டும். ஆக்ஷன், நடனம் இந்த இரண்டும் இருந்தால் கதாநாயகன் ஆகி விடலாம். மற்ற இயக்குநர்கள் நடிகர் ஆக்கிவிடுவார்கள். இந்த இரண்டையும் வைத்து நான் விஜய்யை கதாநாயகன் ஆக்கினேன். பிறகு ‘பூவே உனக்காக’ போன்ற படங்கள் மூலம் இயக்குநர்கள் அவரை நடிகராக்கி விட்டார்கள்.

இப்படி வளர்ந்துதான் விஜய் வியாபார ரீதியான கதாநாயகன் ஆனார். அந்த வகையில் என்னை நடிகராக்கியுள்ள இந்த ‘நையப்புடை’ படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம். இதில் என்னை சண்டையிடும் திறமைசாலியாக காட்டி இருக்கிறார்கள். கயிற்றில் கட்டி தொங்க விட்டு சாகசம் செய்ய வைத்தனர். படமாக்கிய பிறகு அதை பார்க்க எனக்கே ஆச்சர்யர்மாக இருந்தது. இந்தபடம் வெளியானதும் விஜய்க்கு நான் தான் போட்டியாக இருப்பேன் என்று நினைக்கிறேன்’’ என்றார் சிரித்து கொண்டு.

நிகழ்ச்சியில் கலைப்புலி தாணு, கவிஞர் பா.விஜய், இயக்குனர் விஜய கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts