புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், ‘இதுவா நல்லாட்சி’, ‘நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவர்களை கைதுசெய்’, ‘விஜயகலாவை கைது செய்’ போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாணவி வித்தியா வழக்குடன் தொடர்புபட்ட சந்தேகநபரான சுவிஸ் குமாரை தப்பவைக்க முனைந்ததாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி பற்றிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அண்மையில் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அமைச்சர் விஜயகலாவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.