நெடுஞ்சாலையொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் காரில் செல்வதை காண்பதற்காக தனது குடும்பத்தினர் அருகில் தள்ளுவண்டியொன்றில் படுத்தவாறு காத்திருந்த விசேட தேவையுள்ள ஒருவரை தனது காரை நிறுத்தி இறங்கி பாப்பரசர் ஆசீர்வதித்துள்ளார்.
தென் இத்தாலியிலுள்ள கலபிறியா கிராம பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த மனதை நெகிழ வைக்கும் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கலபிறியோவிலுள்ள கஸனோ அல்லோ ஜொனியோ எனும் இடத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு திரும்பிய பாப்பரசரை காணும் ஆவலுடன் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்த மக்கள் மத்தியில் மேற்படி விசேட தேவையுடைய பெண்ணும் இருந்தார்.
ரொபேர்டா என்ற அந்த பெண்ணின் உறவினர்கள் “பாப்பரசரே தயவு செய்து நின்று தேவதையொருவரைப் பாருங்கள்” என்று பொருள்படும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அந்த பதாகைகளை பார்த்ததும் தனது காரை நிறுத்தும்படி பணித்த பாப்பரசர் காரிலிருந்து இறங்கி விசேட தேவையுடைய குறிப்பிட்ட பெண்ணின் அருகே சென்று குனிந்து அவரது நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்தார்.
பாப்பரசரின் இந்த கனிவான செயலால் அந்த பெண்ணும் அவரது உறவினர்களும் ஆனந்த மேலீட்டால் கண்ணீர் சிந்தினர்.
ரொபேர்ட்டா என்ற அந்த விசேட தேவையுள்ள பெண் அவர் சுவாச உபகரணத்தின் உதவியுடனேயே உயிர் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.