உள்ளக விசாரணை என்பது ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்து விடும். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வராது. ஆகவே இந்த விசாரணை சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார் சர்வதேச விசாரணையைக் கொண்டு வரமுடியாது. அது உள்ளகப் பொறிமுறையாகத்தான் இருக்கும் என்று.அதேபோன்று, தேர்தலின் போது சகல தமிழ் கட்சிப் பிரதிநிதிகளும் உள்ளக விசாரணை என்பது தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமானது அல்ல. ஆகவே சர்வதேச விசாரணை தான் வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கேட்டிருக்கின்றோம்.
இன்றைய காலத்தில் தமிழ் மக்களுடைய முற்றுமுழுதான விடுதலையை வேண்டி காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டிருக்கின்றது.
உள்ளக விசாரணையை ஐநா மேற்பார்வை செய்ய முடியும், குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனையை கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் போன்ற விடயங்களை உலக நாடுகள் தாங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியும் என்று கூறக்கூடும்.
ஆனால், இலங்கை அரசாங்கம் ஏதாவது ஒருவகையில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்கி கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய சிலருக்கு தண்டனையைக் கொடுக்கலாமே தவிர குற்றம்புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்பது முதலாவது கேள்வி.
உள்ளக விசாரணை என்பது ஓரிருவருக்கு தண்டனையை கொடுத்து முடிந்துவிடக்கூடும், ஆனால் சர்வதேச விசாரணை என்பது இதற்கு அப்பால் சென்று குற்றங்கள் உருவாவதற்கு அடிப்படைக் காரணம் என்ன, தமிழ் மக்களுடைய பிரச்சினை என்ன? இலங்கையில் உள்ள பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்று நான் நம்புகின்றேன் ஒரு சர்வதேச விசாரணையால் தான் முடியும் என்று.
உள்ளக விசாரணை என்பது ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்து விடும். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வராது. ஆகவே இந்த விசாரணை ஐநா மட்டத்தில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.