விசாரணைக் குழு அமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை: வடக்கு அமைச்சர்கள்

வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாக மாட்டோம் என சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 13ஆது திருத்தச் சட்டத்திலோ மாகாண சபை தேர்தல் சட்டத்திலோ முதலமைச்சருக்கு இல்லையென்றும் மாகாண செயற்குழுவிற்கே அதற்கான அதிகாரம் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம், இக்குழு சட்டவிரோதமானதென குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, இவ்வாறான குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமாயின் அது வடக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட வேண்டுமென்றும், விசாரணை அறிக்கையும் முதலமைச்சருக்கு அன்றி, அவைத் தலைவருக்கே சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் குறித்த இரு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, முதலமைச்சரின் அமைச்சுகளிலும் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இவ் அமைச்சர்கள், அவை குறித்தும் விசாரிக்கப்பட வேண்டுமென்றும், முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு விஜயம் தேற்கொண்ட போது பெற்றுக்கொண்ட நிதி குறித்தும் பதிலளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts