விசாரணைக்குத் தயாரா? சந்திரிகாவுக்கு சிவாஜிலிங்கம் சவால்!

நவாலி, செம்மணி, நாகர்கோவில் படுகொலைகள் குறித்த விசாரணைகளுக்குத் தயாரா என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் சவால் விடுத்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வு நேற்றய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானோருக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையிலே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் கூறியுள்ளார். இத்தகைய நிலையில் நான் அவரிடம் நேரடியாகவே கேட்கிறேன், நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை இனப்படுகொலையை விசாரிக்க முடியுமா?

குறிப்பாக நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதல், செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகள், நாகர் கோவிலில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்கள் மீதான படுகொலை போன்ற படுகொலை சம்பவங்கள் நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றவையே. இவற்றை உங்களால் விசாரணை செய்ய முடியுமா?

ஆகவே போர்க்குற்றங்களை விசாரிப்போம், விசாரிக்கின்றோம் என ஐக்கிய நாடுகள் சபைக்கு பூச்சுற்றுகின்ற நடவடிக்கைகளையே மேற்கொள்கிறீர்கள். மேலும் நாம் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளையும் அத்துடன் எமது விடுதலைக்காக போரிட்டு உயிர்நீத்த போராளிகளையும் தளபதிகளையும் நாம் நினைவு கூருவோம். ஏனெனில் புலித்தேவன், நடேசன் போன்றோர் இறுதி நேரத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போது அவர்களை இலங்கைப் படைகள் படுகொலை செய்திருந்தனர். எனவே படுகொலைசெய்யப்பட்ட அனைவரையும் நாம் நினைவுகூருவோம்.

நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது பொலிஸார் அங்கிருந்த மக்களையும் பாடசாலை அதிபரையும் மிரட்டியிருந்தனர். தற்போதும் கூட நாம் இந்த நினைவஞ்சலியை புலனாய்வாளர்கள் சூழவே நடத்தி வருகின்றோம். ஆகவே எமது நினைவஞ்சலி நடாத்துவதற்கு எத்தகைய தடங்கல் வரினும் அவற்றை கடந்து நாம் இதனை நடத்துவோம். ஏனெனில் படுகொலை செய்யப்பட்ட எமக்காக மரணித்த எம் உறவுகளை நினைவு கூருவதனுடாகவே எமக்கான தீர்வும் நீதியும் கிடைக்கும் என்றார்.

Related Posts