விக்ரம் என் படத்தில் வில்லனாக நடிக்க ஆசை – சிவகார்த்திகேயன்

சிவகார்த்தி கேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ வருகிற 4–ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி…

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் டி.இமானுக்கு என் நன்றி.

எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை செய்து முடித்து பெரியாளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்வியலை சுவாரசியமாகவும் நகைச்சுவை உணர்வுகளுடன் காட்சியமைத்து இருக்கிறோம். என்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும். ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தின் பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைவதற்கான முக்கியமான காரணமாகும். நான் சிறுவயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன். அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்கு வைப்பது என்பது பெருமைக்குரியது.

ரஜினி சாருக்கு பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால் தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். படத்தின் சிறப்பு, தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண். அவரை சுற்றி நடக்கும் குடும்ப அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம். என்னை ரசிப்பவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருப்பதால் அவர்களை மதித்து அவர்கள் ரசிக்கும் விதமாக தான் காட்சியமைத்து இருக்கிறோம்.

இந்த திரைப்படம் மதுரையின் மண் வாசனை மாறாமல், அதே நேரத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமான தருணத்தை நகைச்சுவையாக தந்துள்ளோம். கதாநாயகனாக திரையில் வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. இயக்குநர் பாண்டிராஜ் தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர் நீச்சல்’ படத்தில் கடைசி இருபது நிமிடம் என்னை வசனம் பேசாமலே நடிக்க வைத்தார். இயக்குநர் எழில் என்னை வைத்து முழுநீள நகைச்சுவை படத்தை எடுத்தார்.

இயக்குநர் பொன்ராம் சத்தியராஜ் போன்ற பெரிய நடிகருக்கு இணையாக நடிக்க வைத்திருந்தார். இவை அனைத்தும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டும் தான். என்னுடைய காதலி மற்றும் தோழி அனைவருமே என் மனைவி மட்டும் தான். காரைக்குடியில் பிரியா மெஸ் கடையில் சாப்பிட்டதில் இருந்து டையட் என்பதை மறந்துவிட்டேன்.

அந்த அளவுக்கு நன்றாக உணவு இருந்தது. பள்ளியில் ஒரே ஒரு முறை மேடை ஏறி பேச்சுப் போட்டியில் கலந்து இருக்கிறேன். அதற்கு பிறகு கல்லூரி காலங்களில் மட்டும் தான் மேடை ஏறியுள்ளேன். நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவருடன் ஒருமுறை பேட்டி எடுக்கும் போது அவர் கூறினார் ஒரு நாள் நீ கதாநாயகனாக வருவாய். அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன் என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விக்ரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன்.

Related Posts