அரசியல்வாதிகள் சிலர் முதலமைச்சர் மீதும், வடக்கு மாகாணசபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணசபை சரியாக இயங்கவில்லை என்றும், வந்த அபிவிருத்தித் திட்டங்களைத் திருப்பி அனுப்பியதைத் தவிர முதலமைச்சர் வேறு எதனையுமே செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டிவருகிறார்கள். உண்மையில், விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இல்லாது போயிருந்தால், அரசுக்குச் சாமரம் வீசும் தமிழ்த்தலைவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் உட்காந்திருந்தால் நடைபெற்ற தமிழினப்படுகொலை உலக அரங்கில் மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வீடுகள் புனரமைப்பதற்கான கட்டுமானப் பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக் கிழமை (10-06-2018) திருநெல்வேலி கலைச்சுடர் சனசமூகநிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு ஏராளமான தேவைகள் இருக்கின்றன. ஆனால், மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதியோ மிகக்குறைவாகவே உள்ளது. இந்தச் சொற்ப நிதியை வைத்து உங்களின் தேவைகளை முழுமையாக எங்களால் நிறைவேற்றமுடியாமல் உள்ளது. இதனால், எங்களுக்கு வாக்களித்தும் நாங்கள் உங்களுக்கு உதவவில்லையென்று எங்கள் மீது உங்களுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது.
வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போதே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தர முடியும். ஆனால், எத்தகைய அபிவிருத்தி வடக்குக்கு வேண்டும் என்று எங்களை எதுவுமே கேட்காமல் வடக்கில் என்ன செய்யவேண்டும் என்று மத்திய அரசே தீர்மானிக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் எமது எதிர்கால சந்ததி இந்த மண்ணில் வாழமுடியாத அளவுக்குச் சுற்றுச்சூழலைச் சீரழிப்பதாக இருந்தால் நாம் அதனை நிராகரிக்க வேண்டியிருக்கிறது.
மாகாணசபையை நிர்வகிக்கும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளையும், அரசின் எதேச்சாதிகாரத்தால் ஏற்படுகின்ற பிணக்குகளையும் தனிப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் குறைபாடுகளாகவும், அவரது விதண்டாவாதமாகவும் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் விசமப் பிரச்சாரம் செய்யத்தொடங்கியுள்ளார்கள்.
நடைபெற்றது தமிழினப்படுகொலை என்பதை எவருக்கும் அடிபணியாமல் உரத்துச் சொல்லும் தமிழ்த்தலைவராக இன்று விக்னேஸ்வரன் அவர்களே இருப்பதால் அவர் மீண்டும் முதலமைச்சராக வருவதை அரசாங்கமும், அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடுபவர்களும் விரும்பவில்லை. அடுத்த முதலமைச்சர் தாங்கள் தான் என்று கனவு காண்பவர்களும் முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்வதை விரும்பவில்லை. இவர்களே வடக்கு முதலமைச்சர் மீது விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள். இந்தப் பின்னணியை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு ரூபா 6 இலட்சம் பெறுமதியான சீமெந்துப் பைகளும், கூரைத்தகடுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.