தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும்’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ‘எமது கட்சியானது அமைதியான ஒரு தேர்தலையே விரும்புகிறுது, அமைதியான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் த.தே.கூ. பொய்யான பிரசாரங்களின் மூலம் மக்களினை நாடிச் செல்கின்றது.
அரசு இதுவரையில் எவ்வளவோ பெரிய அபிவிருத்திகளினை மேற்கொண்டுள்ளது அதில் எந்தவொரு அபிவிருத்திகளையும் த.தே.கூ. அரசிடம் கேட்டதில்லை. குறிப்பாக முன்னால் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல் செயற்பாட்டைக்கூட அரசு தானாகவே மேற்கொண்டது இதனைக்கூட த.தே.கூ. கேட்கவில்லை’ என்றார்.
மேலும், ‘த.தே.கூ. பொலிஸ், காணி அதிகாரங்களினை முன்னிறுத்துகின்றனர் ஆனால் இலங்கையின் ஏனய 8 மாகாணங்களும் இவ்வதிகாரங்கள் இன்றிதான் இயங்குகின்றன அவ்வாறு இருக்கையில் வடக்கில் மட்டும் இவ்வதிகாரங்கள் மூலம் அபிவிருத்தினை செய்யமுடியாது. இந்தியாவை விட இலங்கை எவ்வளவோ சிறிய நாடு இதில் இவ்வதிகாரங்களை பிரிப்பது அவ்வளவு சுலபமல்ல’ என்றார்.
அத்தோடு, ‘யாழ். தீவுப்பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கும் எமக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை அது கட்சி ஆதரவாலர்களின் செயற்பாடாக இருக்கலாம் இதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை. வலி. வடக்கில் 2003ஆம் ஆண்டு 64 சதுர கிலோ மீற்றரிலும், 2004ஆம் ஆண்டு 37 சதுர கிலோ மீற்றரிலும், 2013ஆம் ஆண்டு 24 சதுர கிலோ மீற்றரிலும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இச்செயற்பாடு தொடர்ந்து இடம்பெறும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கட்சியின் முதன்மை வேட்பாளர் தவராஐா, கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.