விக்னேஸ்வரனை கைது செய்தால் ஞானசாரர் சரணடைவார் : பொது பலசேனா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யுமாறு பொது பலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஞானசார தேரரை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில், கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டத்திற்கு அமையவே ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கும் மாகல்கந்தே சுதந்த தேரர் அவ்வாறு அவரைக் கைது செய்யவதாயின், அதற்கு முன்னர் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

விக்கினேஸ்வரனை மட்டுமன்றி ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தால் அவரை கைது செய்ய முடியும் என தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் சிவஜிலிங்கத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேற்கூறப்பட்டவர்கள் மட்டுமன்றி விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் அதேபோல் அசாத் சாலி ஆகியோரையும் அரசு கைது செய்யுமாக இருந்தால், ஞானசார தேரர் உடனடியாக சரணடைவார் எனவும் பொது பலசேனா பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

Related Posts