வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக வெளியாகியிருந்த பல விடயங்களை அவர் குறிப்பிடவே இல்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு, அதற்கு அரசாங்கத்திடம் பதிலை கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தன 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் நாடாமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்திலேயே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து சம்பந்தன் சபையில் விளக்கமளிக்கையில்-
”எழுக தமிழ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் அனைத்து விடயங்களையும் அவர் அங்கு பேசியிருந்தார் என்று நான் கருதவில்லை. உண்மையில், தாம் கூறியதாக காரணம் கூறப்பட்ட விடயங்களுக்கு அவர் மறுப்பும் வெளியிட்டிருந்தார். அவர் இந்த சபையில் இல்லாத நிலையில், அவருக்கு இங்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
அவர் மிகவும் பொறுப்பான நபர். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சராக இருக்கும் அவர், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார். வடக்கு மக்கள் அவரை கணிசமான பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்துள்ளனர். ஆகவே, அவர் கூறியதாக காரணம் காட்டப்படும் கருத்துக்களை தாம் வெளியிட்டிருக்கவில்லை என்று அவர் கூறும்போது, இதுபற்றி கருத்து வெளியிடுபவர்கள் அதற்கு முன்னதாக உண்மை என்னவென்பதை கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டும்.
விக்னேஸ்வரனின் உரையின் தமிழ் வடிவம் எனக்குக் கிடைத்திருந்தது. அதை வாசித்து நான் அறிந்ததில் அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் பல கருத்துக்களை அவர் கூறியிருக்கவில்லை” என்றார்.