வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றினர்.
யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை யாழ். ரில்கோ விடுதியில் நேற்று மாலை சந்தித்தார். இதன் போது இவர்களின் சந்திப்பு இடம்பெறவிருந்த அறையில் வடக்கு மாகாண சபையின் கொடியும் இந்தியத் தேசியக் கொடியும் வைக்கப்பட்டிருந்தன. இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இலங்கைத் தேசியக் கொடிதான் வைக்கப்பட வேண்டும். அல்லது வடக்கு மாகாண சபை கொடியையும் இந்தியக் கொடியையும் அகற்றுமாறு தெரிவித்து,அதனைச் சந்திப்பு நடைபெற்ற அறையில் இருந்து வெளியே எடுத்துச் சென்றனர். இறுதியில் எந்தவொரு கொடியும் வைக்கப்படாமலேயே சந்திப்பு நடத்தப்பட்டது.