வாழ்வாதார நிவாரண திட்டத்தின்கீழ் 706 பேருக்கு கடன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாழ்வாதார நிவாரண கடன் (சஹண அருண கடன் திட்டம்) திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் 706 பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஆ.ரகுநாதன் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார்.

வாழ்வாதார நிவாரண கடன் திட்டம் இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, வாழ்வாதார தொழில் முயற்சிக்கான கடன்கள், சமுர்த்தி வங்கிகளால் வழங்கப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்டத்திலுள்ள 33 சமுர்த்தி வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய் கடன் திட்டத்திற்கு இன்று வரை 807 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், அவற்றில் 334 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 5000 ரூபாய் நுகர்வு கடனைப் பெறுவதற்காக 473 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்ததுடன், அதில் 372 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன்கள் எவ்வித பிணைகளும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கடனை பெற்றவர்கள், முதல் வருடம் கடன் தவணை பணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லையென்பதுடன், தொடர்ந்து இரண்டாவது வருடத்திலிருந்து 4 சதவீத வட்டியுடன் கடன்தவணை பணத்தை மீள செலுத்தவேண்டும் என ரகுநாதன் தெரிவித்தார்.

இந்த கடன் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கும் குழுவொன்று அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் கடன் வழங்குவதில் சிறு காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கடன் வழங்கலில் முறைகேடுகள் ஏற்படாமல், உரிய பயனாளிகளுக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts