வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் – கொன்சலட் ஜெனரல்

வடமாகாணத்துக்கு வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இதுதொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருப்பதாகவும் இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.

india_acting_deputy_commissioner_ds_moorthy

இந்திய அரசாங்கத்தால் வடமாகாணத்தில் கடந்த வருடம் (2013) மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், உதவிகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கயில்,

நாங்கள் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், வாழ்வாதார உதவிகள் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பது திருப்தியாகவுள்ளது. எமது நடவடிக்கைகளை சரிவர முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 28 ஆயிரத்து 625 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வருடம், 30 ஆயிரம் வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் (2015) டிசெம்பர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளும் பூர்த்தி செய்யப்படுவது எமது நோக்கமாக இருக்கின்றது.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு 220 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதன் வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. குருநகர் வடகடல் பகுதியில் 152 மில்லியன் ரூபாயில் மீன் வலை உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, தற்போது 3 மடங்கு அதிகரித்த உற்பத்தி அங்கு மேற்கொள்ளப்படுகின்றது. அந்த தொழிற்சாலை அப்பகுதி மக்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கின்றது.

அத்துடன் 145 மில்லியன் ரூபாயில் துரையப்பா விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வேலைத்திட்டம் விரைவில் நிறைவடையும். கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்துக்கு உபகரணங்கள், வாகனங்கள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு 30 மில்லியன் இந்திய ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 140 மில்லியன் இந்தியன் ரூபாயில் திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன.

வடக்கு புகையிரத பாதை அமைக்கும் திட்டத்துக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர், குறைந்த வட்டியில் கடனாக வழங்கியுள்ளோம்.

யாழ் மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வருடம் கலாசார மண்டபம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீனவர்களுக்கு 150 படகுகளும் உபகரணங்களும் வழங்கவுள்ளோம்.

வடமாகாணத்தில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்புகள், மொழிப்பயிற்சிக்காக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உபகரணங்களுடன் கூடிய 32 கணினிகள் வழங்கப்பட்டு கற்கைநெறி ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ளது.

நாம் மேற்கொண்டுவரும் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் மக்களுக்கு பயனுடையதாக சென்றடைய வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமும் விருப்பமும் ஆகும் என அவர் தெரிவித்தார்.

Related Posts