வாழ்க்கையின் கடைசிக் காலத்திலேயே அரசியல் என்னை வந்தடைந்தது – முதலமைச்சர்

vicky0vickneswaranவாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தான் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிர்வாகம் சார்ந்த கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘நான் பதவியேற்ற பின்னர் உங்கள் யாவரையும் அழைத்து ஒருமித்துவைத்துக் கூட்டம் கூடுவது இதுவே முதற்தடவையாகும். சிலருக்கு எதுவுமே நேரம் சென்று தான் நடக்கும். ஜே.ஆர்.ஜயவர்த்தன சுமார் நாற்பது வருட அரசியலின் பின்னர் தான் பிரதம மந்திரியாகி பின்னர் தான் ஜனாதிபதியானார்.

அதேபோல்தான் வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது. என் நடவடிக்கைகளும் தாமதமாகியே விருத்தியடைவதை நான் அவதானித்துள்ளேன்.

வேலைக்குப் புதியவன் என்ற முறையில் பலதையும் அவதானித்துப் புரிந்துகொள்ள எனக்கு இந்தக் கால அவகாசம் இடமளித்திருந்தது. இன்று நீங்கள் கூறும் விடயங்களைக் கிரகித்துக்கொள்ளும் அளவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே தகைமையைப் பெற்றிருந்தேனா என்பது சந்தேகந்தான்.

போர்க்காலத்தின்போது பல வருடகாலமாக உங்கள் கடமைகளில் ஒருவித தேக்கம் காணப்பட்டு வந்தது. ஆகவே போதிய அறிவை, அனுபவத்தை நீங்கள் யாவரும் உங்கள் கடமைகளில் பெற்றிருப்பீர்கள் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் தகைமைகளை, அனுபவங்களை, கடமைகளை விருத்தியடையச் செய்து உங்களை நல்ல நிர்வாகத்தவர்களாக ஆக்குவதற்கு ஆவண செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாங்கள் மக்கள் சேவகர்களே அன்றி, மக்களை ஆட்சி செய்ய வந்தவர்கள் அல்ல. முதலில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஆண்டான் – அடிமை போன்றதொரு உறவு அரச அலுவலர்களுக்கும் மக்களுக்கும் இடையில் இருந்து வந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் கூட அவ்வாறானதொரு உறவையே நாங்கள் தொடர்ந்து பாதுகாத்து வந்திருந்தோம்.

இது தவறு என்று நாங்கள் அப்போது நினைக்கவில்லை. பின்னர் இயக்கங்கள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும்போதும் மேலிருந்து கீழ் நோக்கி இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாகவே நாங்கள் தொடர்ந்து கடமையாற்றி வந்துள்ளோம். போர் முடிந்த பின் கூட மறுபடியும் ஒரு ஆண்டான் – அடிமை உறவுமுறை தொடர்ந்து வந்துள்ளதை நான் இந்த மூன்று மாதங்களுள் அவதானித்துள்ளேன்.

அதிகாரத்திற்கு அண்மித்தவர்கள் தாங்கள் இட்டதே சட்டம் என்ற அடிப்படையில் தான் நிர்வாகம் நடந்து வந்துள்ளது என்று காண்கின்றேன். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய எனக்கு அனுசரணையாக நீங்கள் யாவரும் நடந்துகொள்ள வேண்டும். மற்றைய மாகாணசபைகளில் என்ன விதத்தில் நிர்வாகம் நடக்கின்றதோ என்று எனக்கு தெரியாது. ஆனால், நான் இந்தத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரையில் நாங்கள் ஒரே நேரத்தில் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகவும் மக்கள் காவலர்களாகவும் மக்கள் சேவகர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

பலவிதமான பிரச்சினைகளை எமது மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. போரின் பின்னரான எமது மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இவை சம்பந்தமாகவும் பிரச்சினைகள் பலவற்றை எதிர்நோக்கியுள்ளோம். அப்பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள முடியாதொரு நிலையில் தான், ஜனாதிபதியை அணுகி அதற்கான தீர்வுகளைப் பெற நான் முயற்சித்து ஓரளவு முன்னேற்றமும் கண்டுள்ளேன்.

இந்த நிலையில் எமது நிர்வாக அலகைச் சீருடன் செம்மையாகச், சிறப்பாகக் கொண்டு நடத்த உங்கள் ஒவ்வொருவரதும் உதவிகளும் வேண்டும்.
போரின் பின்னர் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மீன்பிடி, வணிகம், வியாபாரம், கூட்டுறவு, காணி போன்ற பலவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மக்கள் எம்மிடம் பலதையும் எதிர்பார்க்கின்றார்கள். கடந்த மூன்று மாதங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறைக்குச் சென்று வந்த மக்கள், போரினால் பலதையும் இழந்த மக்கள், பரிதாபகரமான நிலையில் உள்ள மக்கள் என்று பலரும் என்னிடம் வந்து தமது குறைகளைக் கூறினார்கள்.

அவர்கள் குறைகளுக்குத் தீர்வு காண்பது என்றால் நாங்கள் கூட்டாக உழைத்து அவர்களுக்குத் தீர்வுகளைக் பெற உதவி செய்யவேண்டும். அதற்கு நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை காலமும் நாம் எப்படி வாழ்ந்து வந்தோம் என்பது அவசியமில்லை. ஆனால், இனி எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றோம் என்பது முக்கியம்.

நீதிபதியாகத் தொடர்ந்து 25 வருட காலம் பதவி வகித்ததனால், எனது எதிர்பார்ப்பு மற்றைய நிர்வாகிகளில் இருந்தும் வித்தியாசமாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்து கொள்கின்றேன். ஆனால், எனது எதிர்பார்ப்புக்களுக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். என்ன அந்த எதிர்பார்ப்பு என்று நீங்கள் கேட்கக்கூடும்.

மக்களின் அவலங்களை, தேவைகளை, குறைகளை, எதிர்பார்ப்புக்களை எவ்வாறு தீர்க்கலாம் என்பதில் எமக்கு புதிய புதிய உத்திகளும் பொறிமுறைகளும் உதிக்க வேண்டும். சட்டத்தின் உக்கிரத்தைத் தணித்துக் கூட எவ்வாறு மக்கள் நலன்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் கரிசனை எடுக்க வேண்டும். அதைச் செய்ய முடியாது, இதைச் செய்ய முடியாது, சட்டத்தில் இடமில்லை என்று சுலபமாக கூறி வாழாதிருக்காது மக்களுக்குத் தேவையான சட்டப்படி எதிர்பார்க்கக்கூடிய நல உரித்துக்களைப் பெற்றுக்கொடுக்க நாங்கள் முன்வர வேண்டும்.

எந்த நேரத்திலும் உங்களில் எவரும் என்னுடன் வந்து உங்கள் குறைகளை, எதிர்பார்ப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம். எனக்கு சாதி, குலம், மதம், இனம் எதுவுமே முக்கியமல்ல. உங்கள் மனிதத்துவம் மட்டுமே முக்கியம். உங்களுக்குள் பிரிவினைகள் பல இருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரையில் உங்கள் ஒவ்வொருவரையும் சகோதரத்துவத்துடன் தான் நான் நடத்துவேன்.

நான் புரட்சிகளைக் கொண்டுவரப் பார்க்கின்றேன் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். வெவ்வேறு விதமான மனிதர்களையும் மனிதர்களாகப் பார்த்துப் பழகியவனே அன்றி சாதி, மத, இன அடிப்படையில் பார்த்துப் பழகாதவன். ஆகவே, இந்தப் பேதங்களை அனுசரித்து வந்தவர்கள் தயவுசெய்து நான் கடமையில் இருக்கும் வரையில் ஓரளவு விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ளுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

யுத்தம் பெண்களையே மிகவும் பாதித்துள்ளது. அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர, அவர்கள் தம் மீது மதிப்பைப் பெற, தன்னம்பிக்கை பெற, தமது வாழ்க்கையைச் செவ்வனவே எடுத்துச் செல்ல நாங்கள் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும். பெண்களைக் கேவலமாக நடத்த முற்படும் அலுவலர்களை என்னால் மன்னிக்க முடியாது எஎனவும் தெரிவித்தார்.

சட்டம் எமக்குப் பல கடப்பாடுகளை விதித்து எமது அதிகாரங்களையும் முடக்கி இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆனால், அதற்கூடாகச் சுழியோடி மக்கள் நலன்களை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது சம்பந்தமாக எனக்கு அறிவுரை வழங்குவது உங்கள் பொறுப்பு என்பதை மறக்காதீர்கள்’ என்றார்.

Related Posts