யாழில்.வாள் வெட்டுக் குழுவை சேர்ந்துவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இரவு வாள்களுடன் நடமாடினார்கள் என மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர். நல்லூர் கோவில் வீதியை சேர்ந்த ஞானசேகரம் விஜித்பாரத் (வயது 21) எனும் இளைஞனை பொலிஸார் தொடர்ந்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த நபரின் தகவலின் பிரகாரம் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை நல்லூரை சேர்ந்த வரதராஜன் இந்திரஜித் (வயது 21), கல்வியங்காடு பகுதியை சேர்ந்த தவராஜா நிக்சன் (வயது 20) , மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்த அன்பழகன் சாருக்சன் (வயது 21) ஆகிய மூவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்று (வியாழக்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் சந்தேக நால்வரையும் முற்படுத்தினார்கள்.
அதனை அடுத்து சந்தேக நபர்களில் ஞானசேகரம் விஜிதபரத் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். ஏனைய மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.
இதேவேளை வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பொலிஸார் தன்னை தேடிவருவதாக தெரிவித்து இளைஞர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக சரணடைந்தார்.