கொக்குவில் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (புதன்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறும் பணித்துள்ளார்.
கடந்த மாதம் 30ஆம் திகதி நடத்தப்பட்ட குறித்த வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.