வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட 6 பேரில் மூவர் கைது!!

யாழ்ப்பாணம், கொட்டடியில் இருவர் மீது வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஆறு பேரில் மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் நீதிமன்றின் உத்தரவில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நின்ற இருவர் மீது நேற்று முன்தினம் இரவு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடத்திய கும்பலை கொட்டடி இளைஞர்கள் துரத்திச் சென்ற போது, கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டு தப்பிச் சென்றது.

வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உரிமையாளரைக் கைது செய்ததுடன் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் முற்படுத்தப்பட்டனர். 3 மோட்டார் சைக்கிள்களும் சான்றுப்பொருள்களாக நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டதுடன், மேலும் மூவர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts