வாள்வெட்டுக் கும்பலின் வன்முறையில் மாணவன் உள்பட இருவர் காயம்!!

கொக்குவில் மற்றும் குப்பிளான் ஆகிய இடங்களில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் வன்முறைகளில் காயமடைந்த மாணவன் உள்பட இருவர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்த இருவர், குடும்பத்தலைவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிக் காயப்படுத்திவிட்டுச் சென்றனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளிலில் முகத்தை துணியால் கட்டிவந்த இருவரே இந்த குற்றச்செயலைச் செய்துவிட்டு தப்பித்தனர் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஹரிதாஸ் சத்தியதாஸ் என்ற குடும்பத்தலைவரே காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருடனான தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விளானில் மாணவன் மீது தாக்குதல்

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு புகுந்த முகத்தை மூடிக்கட்டிவந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று 15 வயது மாணவனைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிவராசா சாரூஜன் (வயது – 15) என்ற மாணவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவன், ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் தனு ரொக்கின் உறவுமுறை இளைய சகோதரன் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாயிலுள்ள தனு ரொக்கின் வீட்டில் கடந்த வாரம் தாக்குதல் நடத்திய கும்பல், அவரை அச்சுறுத்தும் வகையில் அவரது உறவுமுறைச் சகோதரனையும் தாக்கியுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.

Related Posts