உடுவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு வாள்வெட்டினை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் தடிகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
இரவு நேர ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் சட்டவிரோதக் கூட்டம் கூடி நின்ற இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை செய்ததில் இவர்கள் சுன்னாகம் பகுதியில் இயங்கி வந்த ஆவா குழுவினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததாகப் பொலிஸார் கூறினர்.
அத்துடன், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வாள்கள் மற்றும் பொல்லுகள் என்பவற்றையும் கைப்பற்ற முடிந்ததாகப் பொலிஸார் கூறினர். இவர்கள் அனைவரும் 21 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக சுன்னாகம் பகுதியினை மையமாக வைத்து இடம்பெறும் வாள்வெட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வழிப்பறிக் கொள்ளை என்பவற்றுடன் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபர்களை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.