இந்தியாவின் வாரணாசிக்கும் கொழும்பிற்கும் இடையிலான போக்குவரத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஐ.நா.வின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தமது உரையில் மேலும் தெரிவிக்கையில்-
”இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதாக பௌத்த மதம் அமைந்துள்ளது. பௌத்த மதமானது வன்முறைகளையும் முரண்பாடுகளையும் தவிர்த்து, சமாதானத்தையும் அன்பையுமே போதிக்கின்றது.
அத்தோடு, சிறந்த கலாசாரத்தையும் மெய்யியலையும் போதிக்கின்றது. இவ்விடயத்தில் இரு நாடுகளும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன.
இதேவேளை, இந்தியாவும் இலங்கையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கும், கல்வி, பொருளாதாரம், விவசாயம், நீர், சுகாதாரம் என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் சந்தர்ப்பத்தில் என்னை இந்நிகழ்விற்கு அழைத்து கௌரவித்த ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.