யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர் தொடர்பில் 262 விண்ணப்பங்கள் ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள நிலையில் இதுவரை விண்ணப்பங்களை வழங்காதவர்களும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது சாட்சியப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் மேலதிக அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதனையடுத்து யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை யாழ்.மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு வேறு மாவட்டங்களில் வசித்து வந்தவர்களில் காணாமல் போனவர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பிலும் குறித்த நாட்களில் வருகைதந்து பதிவுகளை மேற்கொள்ள முடியும்,
எனவே இதனை நல்லவாய்ப்பாக எடுத்து காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் சரியான தகவல்களை வழங்கி சாட்சியம் அளிக்கவேண்டும். அதன்படி ஏற்கனவே 262 விண்ணப்பங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்களின் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய 14ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்தில் செயலகத்தின் கீழ் உள்ள கிராம சேவகர் பிரிவில் இருந்து 10 பிரிவினருக்கும், 15ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் அதன் கீழ் உள்ள கிராமசேவகர் பிரிவில் இருந்து 13 பிரிவினருக்கும் மேலும் 16,17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 8 கிராமசேவகர் பிரிவிற்கு மாவட்டச் செயலகத்திலும் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளன.
இதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்கான வேலைத்திட்டங்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
இருப்பினும் இதுவரை விண்ணப்பம் அனுப்பாதவர்களும் இங்கு வருகைதந்து தகவல்களை வழங்க முடியும். இந்த நடவடிக்கைகள் காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் . எனவே வருகை தருபவர்கள் தம்மிடம் உள்ள தரவுகளையும் எடுத்து வரவேண்டும் என்றார்.