வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க பிரித்தானியா அரசு திட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வாக்னர் கூலிப்படை மீது கொடூர கொலைகள், கைதிகளை சித்திரவதை செய்தல், சூறையாடுதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலக அமைதிக்கு வாக்னர் கூலிப்படையால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பிரித்தானிய உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், அதனை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஹமாஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற அமைப்புகள் போன்று, பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட குழுக்களின் பட்டியலில் வாக்னர் கூலிப்படையும் இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, வாக்னர் கூலிப்படையில் இனி உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்றும், அதனை மீறுபவர்களுக்கு 14 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூன் மாதம், புடினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஷின் அண்மையில் மர்மமான முறையில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts