வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டமையால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்

இரணைத் தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

ஆனால், அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இரணைத்தீவு எமது பூர்வீக நிலம் எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்குங்கள் எனக் கோரி கடந்த முதலாம் திகதி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தங்களின் சொந்த நிலத்திற்கு செல்லும் வரை போராடப் போவதாகவும், கடந்த காலம் போன்று அரசியல் வாதிகளை நம்பத் தயார் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எங்களிடம் வந்து வாக்குறுதிகளை அளித்துவிட்டு சென்ற போதும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நாம் சொந்த நிலத்திற்கு செல்லும் உழைக்கின்றவர்களாக தெரியவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

1992 ஆம் ஆண்டு இரணைத்தீவை விட்டு வெளியேற்றப்பட்ட தாங்கள் இன்று வரை இரணை மாதாநகர் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தாம் 340 குடும்பங்கள் இருப்பதாகவும் 2009 இற்கு பின்னர் தொடர்ச்சியாக சொந்த நிலத்திற்கு செல்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அது சாத்தியமாகவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்

Related Posts