2015-ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்களிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை தேர்தல்கள் செயலகத்திற்கு எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தமது பெயர் 2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உள்வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதனை தேர்தல்கள் செயலக இணையத்தளத்திற்குள் பிரவேசித்து (http://52.1.201.50/web/index.php/ta), உறுதிச் செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு தமது பெயர் பரிந்துரை செய்யப்படாவிடத்து, அவர்களுக்கான உரிமை கோரும் விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலங்களில் அதற்கான விண்ணப்பங்களை பெற்று, மாவட்ட செயலகங்களுக்கு அதனை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கை பிரஜைகளின் பெயர்களும் 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப் படவில்லை என கருதும் பட்சத்தில், தேர்தல்கள் செயலகத்திலுள்ள “ஆ” விண்ணப்பத்தை நிரப்பி செயலகத்திடம் கையளிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரி வித்துள்ளார்.
மேலும் குறித்த இலங்கை பிரஜைகளின் உறவினர்களினால் இந்த விண்ணப்பத்தை நிரப்பி தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இவ்வாறு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் படவில்லையாயின் 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர்கள் உள்வாங்கப்படமாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம்.மொஹமட் குறிப்பிட்டார்.