வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெயலலிதா

மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 19-11-2016 அன்று நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கி இருக்கும் அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

அரவக்குறிச்சி தொகுதியில் 88,068 வாக்குகளைப் பெற்று 23,661 வாக்குகள் வித்தியாசத்திலும்; தஞ்சாவூர் தொகுதியில் 1,01,362 வாக்குகளைப் பெற்று 26,874 வாக்குகள் வித்தியாசத்திலும்; திருப்பரங்குன்றம் தொகுதியில் 1,13,032 வாக்குகளைப் பெற்று 42,670 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடி உள்ளனர்.

மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் எனக்கு நீங்கள் வழங்கி இருக்கும் இந்த தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

எனது தலைமையிலான ஆட்சியின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, எனக்கு தொடர் வெற்றியை அளித்துள்ள எனது அருமை வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம் மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப என்னுடைய பணிகள் எப்பொழுதும் போல் சிறப்புடன் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் விரைவில் பூரண நலம்பெற வேண்டி அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும், என் மீது பேரன்பு கொண்ட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறீர்கள் என்பதையும், பலர் மருத்துவமனைக்கே நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். உங்களுடைய பரிவுக்கு நன்றி. உங்களுடைய பேரன்பை நான் ஒரு போதும் மறவேன்.

என்னுடைய அன்புக் கட்டளையை ஏற்று அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய என் உயிரினும் மேலான எனது அருமை அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Related Posts