2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்படாமை அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்து யாழ். வாசிகள் இருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனால் தாம் வடக்கு மாகாண தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்காளர் பெயர்ப்பதிவின் போது கிராம சேவையாளர்களிடம் “பி.சி’ படிவத்தைச் சமர்ப்பித்தும் கடந்த ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இணைக்கப்படாமைக்கு எதிராக இவர்கள் இருவரும் மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ். பிராந்தியக்கிளையில் முறையிட்டுள்ளனர்.
இல 770, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, க.சின்னையா சிவரூபன், அவரது மனைவியான சிவரூபன் தக்சி ஆகிய இருவருமே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
“2012ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு நடவடிக்கையின் போது J/74 கிராம சேவையாளரிடம் வாக்காளர் பதிவுக்கான “பி.சி’ படிவத்தைக் கையளித்தோம். அதற்கான ஆதாரமாக “பி.சி’ படிவத்தின் அடித்துண்டு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது வாக்காளர் பெயர்ப் பட்டியலில் அவர்களது பெயர் இருக்கவில்லை. “இதனால் நாம் வாக்களிக்க முடியாது போயுள்ளது. நாம் வாக்காளர்களாக விண்ணப்பித்தும் காரணமின்றி பெயர் நீக்கப்பட்டமை அடிப்படை மனிதஉரிமை மீறல்” என்று குறிப்பிட்டே மனிதஉரிமை ஆணைக்குழுவில் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில், சிறுவர்கள் தவிர 18 வயதும், அதற்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் 20 ஆயிரம் பேர்வரை அவ்வாறு வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்படாமல் விடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கிராம சேவையாளர்களின் தவறும் இதற்கான முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் தற்போதைய புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலிலும் 26 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியாவில் உயிரோடு உள்ளவரை இறப்பெய்தியவர் என அறிவித்துள்ளது தேர்தல் திணைக்களம் இது தொடர்பில் தெரியவருவதாவது
வவுனியா மாவட்டத்தில் உயிருடன் உள்ள ஒரு வருக்கு “இறப்பெய்தியவர் என அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து, வடமாகாண சபைத் தேர்தலின் போது வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல், வியாசர் வீதி, 11 “ஏ’ என்ற முகவரியைச் சேர்ந்த ஸ்ரீதர் குமாரவேலு இராசையா என்பவருக்கே இவ்வாறு “இறப்பெய்தியவர் என அறவிக்கப்பட்டு” என்று வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் உயிருடன் இன்னமும் உள்ள நிலையிலேயே இத்தகைய வாக்காளர்அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் வடமாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்ட தாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக வவுனிய மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பொ.குகநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது:
“இறப்பெய்தியவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது’ அல்லது வெளிநாடு சென்றுள்ளார் என்று பதியப்பட்டவாறு வாக்காளர் அட்டை கிடைத்தால் அதைக் கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர் வாக்களிக்க முடியும்.
ஒரு சில கிராம சேவையாளர்கள் தனிப்பட்ட பழி வாங்கல்களுக்காகவோ கடமை அலட்சியம் காரணமாகவோ, தான் சார்ந்துள்ள கட்சிக்கு எதிரான வர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்குகின்றனர்.
கிராம சேவையாளர்கள் வழங்கும் தகவல்களை வைத்தே தேர்தல் திணைக்களம் வாக்காளர் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக என்னிடம் முறைப்பாடு செய்தால் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி குறித்த கிராம சேவையாளர், பிரதேச செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்ளமுடியும்.
அல்லது குறித்த நபர் தனது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்தால், அந்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.