வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்த நிவாரணக் காலம் வழங்கப்பட்டிருந்ததாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறுகிறார்.

அந்தக் கால அவகாசம் நவம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதிலும், வாகன உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று வரை நீடிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாக, அதிகமானவர்கள் வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தந்திருந்ததால் அந்தப் பகுதியில் பாரிய நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் அதிகமானவர்கள் அந்த திணைக்களத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இன்றைய தினத்திற்குள் அனைத்து விண்ணப்பங்களையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின்படி வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் நபர் 14 நாட்களுக்குள் அதன் உரிமையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எனினும் பலர் அவ்வாறு வாகனங்களை உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்து கொள்ளாமல் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் அவ்வாறு பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறுகிறார்.

Related Posts