யாழ்.பல்கலைக்கழக வவுனியாவளாக முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவகை நடாத்திய பிரயோக விஞ்ஞான பீடத்தை சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் அனைவருக்கும் காலவரையறையற்ற வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் வவுனியாவளாக நிருவாகம் இந்த வகுப்புத்தடையை விதித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறாது என்பதுடன் வளாகத்திற்குள் வருவதற்கும் நிருவாகம் தடை விதித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
“வவுனியா, குருமன்காடு பகுதியிலுள்ள முடி திருத்தும் நிலையத்தில் யாழ் பல்கலைக்கழக வவுனியாவளாக முதலாம் வருட மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்துள்ளனர்.
இதன்போது குறித்த முடிதிருத்தும் நிலையத்தின் உரிமையாளர் இவ்விடயம் தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, இரண்டாம் வருட சிரேஸ்ட மாணவர்கள் மொட்டையடிக்க கூறியதாகவும் அதனால் மொட்டையடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் ஊடகங்களில் வெளியாகியதுடன் வளாக நிர்வாகத்தினருக்கும் தெரியவந்தது. இதனையடுத்தே நிருவாகம் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதித்துள்ளது.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் பகிடிவதை செயற்பாடுகள் நடைபெறுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னமே முறைப்பாடு அளிக்கப்பட்டதன் பிரகாரம், அது தொடர்பாக வளாக முதல்வரிடம் விளக்கம் கோரப்பட்டு ஆணைக்குழுவால் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.