வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் வட. மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“வவுனியா வடக்கு பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியற்றத்தினால் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில் அப்பிரதேசத்தின் இருப்பினை தக்க வைப்பதற்காகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நாங்கள் பாடுபட்டிருந்தோம்.
இதில் நானும் வட மாகாண சபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தோம்.
இந் நிலையில் அப்பகுதிக்கான தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவின் போது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அப்பகுதியினை தக்க வைப்பதற்கு உதவியவர்கள் என்ற வகையிலும் எனக்கோ அல்லது என்னுடன் செயலாற்றியவர்களுக்கோ அழைப்பு விடுக்கவில்லை.
எனவே இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர்களில் தெரிவில் எமக்கு எவ்விதத்திலும் உடன்பாடு இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.