வவுனியா மாவட்டத்தை வடமாகாண சபை புறக்கணிக்கின்றது- தியாகராசா

வடமாகாண சபையின் அபிவிருத்தி மற்றும் கவனிப்புக்களில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளிலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கி வடமாகாண சபை செயற்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.தியாகராசா கோரிக்கை முன்வைத்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட மக்களுக்கு வடமாகாண சபை உதவிகள் செய்யவில்லையென தியாகராசா குற்றச்சாட்டு முன்வைத்து தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெள்ளம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் 268 குடும்பங்களை சேர்ந்த 714 பேர் பாதிக்கப்பட்டனர். இடம்பெயர்ந்து வாழும் அந்த மக்கள், கூலித்தொழிலாளிகளாக உள்ளனர். அவர்களுக்கான எவ்வித உதவிகளையும் வடமாகாண சபை செய்யவில்லை. அத்துடன், வவுனியா முருகன் ஆலயத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் வடமாகாண சபை உதவிகள் செய்ய வேண்டும் எனக்கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட, மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மழை வெள்ளத்தால் அதிகமாக மன்னார் மாவட்டமே பாதிக்கப்பட்டது. அந்த மக்களுக்கான சமைத்த உணவுகளை எனது சொந்த நிதியில் மேற்கொண்டேன். வடமாகாண சபையிலிருந்து உடனடியாக நிதியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தை தவிர்ந்த வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இதன்போது கருத்துத்தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், ‘வடமாகாண சபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்யும் போது, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம் எனவே சத்தியப்பிரமாணம் செய்தோம். இருந்தும், அவ்வேளையில் புயலால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்கு எவ்வித உதவிகளையும் வடமாகாண சபையால் செய்யமுடியவில்லை. அதிகாரம் இல்லையென்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து முதலமைச்சரின் கீழ் நிதியத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்கி வருகின்றோம் எனக்கூறினார்.

இதன்போது கருத்துக்கூறிய வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தற்போது வெள்ள பாதிப்புக்குள்ளான 5 மாவட்ட மக்களுக்கும் உடனடியாக நடமாடும் மருத்துவ சேவையை வழங்கியிருந்தோம். அத்துடன், நிவாரணங்களை எனது சொந்த நிதியில் வழங்கினேன். ஆனால் நான் இவற்றை ஊடகங்களுக்கு தெரிவிக்காத காரணத்தால் உங்களுக்கு தெரியவில்லை. இனிவருங்காலங்களில் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றேன் எனக்கூறினார்.

யாழ்.மாவட்ட பாதிப்புக்கள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் கருத்துக்கூறுகையில், ‘யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட சூரியவெளி, சோனகர் தெரு போன்ற இடங்களும் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகின. வடிகால்கள் சீராக்கப்படாமையால் இந்த பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கினார்கள் என தெரிவித்தார்.

இதன்போது கருத்துக்கூறிய ஆளுங்கட்சி உறுப்பினர் தா.லிங்கநாதன், வடமாகாண சபை செய்யும் உதவிகள் பற்றி எங்களுக்கு தெரியாது. வடமாகாண சபை செய்யும் செயற்பாடுகள் பற்றி எங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். திட்டமிடல் சபையொன்று உருவாக்கப்பட்டால் வடமாகாண அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையிலுள்ள தூரங்கள் குறையும் எனக்கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், செயற்படுத்தும் விடயங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றை மொழிபெயர்த்து 2015ஆம் ஆண்டு தருவதற்கு ஏற்பாடு செய்கின்றேன் என தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமக்கான நிதியங்களை உருவாக்கி அதன்கீழ் உதவிகள் செய்தது போல வடமாகாண முதலமைச்சரும் நிதியம் உருவாக்கி உதவிகள் புரியவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன், மைத்திரிபால சிறிசேன சிறுநீரக நோயாளிகளுக்காக நிதியொதுக்கீடு செய்கிறார் எனவும் கூறினார்.

Related Posts