Ad Widget

வவுனியா பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது நேற்று புதன்கிழமை (08) இரவு, நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாதோர் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

vavuniya-kirushnapillai-thevarasa

ஜெயக்குமாரி உட்பட ஏனைய தமிழ் கைதிகளது விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும், நாளை (10) வெள்ளிக்கிழமை, வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கான முன்னாயத்த கூட்டம், நேற்று புதன்கிழமை வவுனியாவில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு விட்டு, நெடுங்கேணியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போதே அவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதநபர்கள் நால்வர், அவரை இடைமறித்து, ‘மவனே போராட்டமா நடத்தப்போறாய். நீ உயிரோட இருந்தாத்தானே போராட்டம் நடத்துறதுக்கு?’ என்று கொச்சை தமிழில் பேசியவாறு, அவருடைய வாயைப் பொத்தி, வீதியோரமாகவுள்ள வயல்காணிக்குள் இழுத்துச்சென்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவரை மீட்ட பிரதேசவாசிகள், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, அவரைப் பார்வையிடச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செயற்குழுவினர் ஆகியோர் வலியுறுத்தியதை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts