வவுனியா, சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவுகள்!

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் முழுமையான உபகரணங்களுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

saththeyalingam

வடக்கு மாகாணத்துக்கான இரண்டாவது வரவு- செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான செலவீனங்களை முன்மொழிந்து ஆற்றிய உரையிலேயே இத்தகவலை அவர் தெரிவித்தார்.

அந்த உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: –

இந்த இரு வைத்தியசாலைகளிலும் முழுமையான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைக்கும் திட்டத்துக்காக வவுனியா வைத்தியசாலைக்கு 20 கோடி ரூபாவும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 11.5 கோடி ரூபாவும் கணக்கிடப்பட்டது. ஆனால் இதனை செயற்படுத்த 2015 ஆம் ஆண்டுக்கான நிதியில் மாத்திரம் ஒதுக்கீடு செய்ய முடியாது என்பதால் மூன்றாண்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் இந்தப் பிரிவுகள் இரு வைத்தியசாலைகளிலும் பூரணமாக இயங்கும் இதேவேளை மாகாணத்துக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து முல்லைத்தீவின் மல்லாவி, புதுக்குடியிருப்பு, மன்னாரின் முருங்கன் வைத்தியசாலைகள் ஒவ்வொன்றுக்கும் 2 கோடி ரூபா செலவில் சத்திர சிகிச்சை விடுதி அமைக்கப்படும்.

அத்துடன் இந்த மூன்று வைத்தியாலைகளையும் ஆதார வைத்தியசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த வருடம் மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட வைத்தியர் விடுதிக் கட்டடத்தை நிறைவு செய்ய 1.5 கோடி ரூபா ஒதுக்கப்படும். இதேபோன்று யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு வைத்தியசாலைகளில் தொடங்கப்பட்ட வைத்தியர் விடுதிக் கட்டடங்களை நிறைவு செய்ய ஒவ்வொன்றுக்கும் 2 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கான கட்டட வேலைகளுக்கு 2 கோடி ரூபாவும், கணேசபுரத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவை அமைக்க 1.5 கோடி ரூபாவும், கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுக்கு வைத்திய விடுதி, உளநல விடுதி அமைப்பதற்கு 5 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எய்ட்ஸ், சயரோகம், மலேரியா நோய்களை அழிப்பதற்கான செயற்றிட்டத்துக்காக 35 கோடி ரூபா ஒதுக்கப்படுகிறது. – என்றார்

Related Posts