வட மாகாண சபையின் 31ஆவது அமர்வு சபை உறுப்பினர்களின் முழுநாள் போராட்டமாக நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றக் கோரிய நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அந்த இடமாற்றத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி சபை உறுப்பினர்கள் சபையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவைத் தலைவரின் தொடர் பேச்சின் பின்னர் அவை மண்டபத்துக்கு சென்ற உறுப்பினர்கள் வவுனியா அரச அதிபர் இடமாற்றம் குறித்தே பிரேரித்தனர். இதனால் வேறு விடயங்கள் பேசப்படாது சபை அமர்வுகளை அடுத்த மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் அவைத் தலைவர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற அவைப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பெரும்பாலானவர்கள் ஈடுபட்டனர். சபையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் போராட்டத்தில் பங்குபற்றவில்லை.
இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறித்த பிரச்சினை தொடர்பில் மீண்டும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி தீர்வை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.எனினும் அதனை ஏற்காத வடமாகாண சபை உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆர்னோல்ட் ஆகியோர், அவைத் தலைவரின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறி சபா மண்டபத்துக்குந் சென்று கலந்துரையாடி ஒரு முடிவை எட்டலாம் எனத் தெரிவித்தனர்.
அதன்படி பல உறுப்பினர்கள் அறைக்குச் சென்ற போதிலும் பசுபதிப்பிள்ளை, தியாகராசா, ஜெயதிலகா போன்றவர்கள் சபை மண்டப வாசலிலேயே அமர்ந்து இருந்தனர். 11.30 மணியளவில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் அமர்வு ஆரம்பமானது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்ற விடயத்தில் சபையின் தலைவர் நேரடியாக ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 23 ஆம் திகதிக்கு அமர்வு ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.
பின்னணி
யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து பின்னர் நாடு திரும்பிய தமிழ் அகதிகள் சொந்த இடங்களில் காணிகள் இல்லாத காரணத்தில் வவுனியாவில் குடியேற்றப்பட்டனர்.
அவ்வாறு குடியேற்றப்பட்ட வவுனியா சிதம்பரபுரம் கற்குளம்-01, கற்குளம்-02, கற்குளம்-03 ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்து தரக்கோரியும். அடிப்படை வசதிகள் செய்து தருமாரு கோரியும் வாழ்வாதார வசதிகள் செய்து தருமாறும் வவுனியாவில் 02-03-2015 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா ஹொரவப்பொத்தானைவீதி, உமா மகேஸ்வரன் சந்தியில் இருந்து வவுனியா பிரதேச செயலகத்தை நோக்கி பேரணியாக ஏ-09 வீதியில் மன்னார் வீதி வழியாக அரச செயலகத்துக்கு வந்தனர்.
தாயகம் திரும்பிய இந்தக் குடும்பங்கள், சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பின்னர், கடந்த 2007 ஆம் ஆண்டு கற்குளம் பகுதியில் காணிகள் வழங்கி தற்காலிக வீடுகளில் குடியேற்றப்பட்டார்கள்.
நிரந்தர வீடுகள் வழங்கப்படும் என்று தங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதி மொழி நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஒரு வருடத்திற்குத் தாக்குப் பிடிக்கத்தக்க வகையிலான தற்காலிக வீடுகளில் குடியிருக்க முடியாத நிலையில் தாங்கள் மிகவும் கஸ்டங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், மழை பெய்யுமானால் பொது மண்டபத்திலேயே, தாங்கள் சென்று தங்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் பிரதேசத்திற்கு பஸ் சேவைகள் நடைபெறுகின்ற போதிலும் தங்களுடைய கிராமங்களுக்கு சரியான வீதிகள் இல்லாத காரணத்தினால் அவற்றைப் பயன்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் அரச அதிபரின் காரியாலயத்துக்கு வந்து மகஜரை கையளிக்க முற்பட்டபோது அரச அதிபர் அதற்கு தடையாக இருந்ததால் மாகாணசபை உறுப்பினர்களான லிங்கநாதன், தியாகராஜா, செனிவிரத்ன, ஜயதிலக்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகாதரலிங்கம் ஆகியோர் அரச அதிபரிடம் இவ்விடயம் குறித்து விவாதித்தனர். ஆயினும் அரச அதிபர் இந்த மக்கள் பிரதிநிதிகளிடமும் கடும் போக்கில் நடந்து கொண்டதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர் .
ஆரம்பத்தில் லிங்கநாதன் 5 பேருடன் சந்திக்கசென்றபோது அவரை வெளியே போகுமாறு அரச அதிபர் பணித்ததாக் தெரிவிக்கப்படுகின்றது . அரச அதிபரின் இந்த கடும் போக்கு குறித்து அவரிடம் தங்களின் கண்டனத்தை தெரிவித்ததுடன் இத்தகைய எதேச்சாதிகார போக்கு குறித்து அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.
இறுதியில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களின் சார்பில் பிரதிநிதிகள் சிலர் வவுனியா அரசாங்க அதிபரைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்து மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
வவுனியா அரச அதிபர் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவமதித்திருந்தார். இதனையடுத்து வடக்கு மாகாண சபையில் குறித்த விடயம் எடுக்கப்பட்டு மார்ச் 17 இல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அரச அதிபரை மாற்ற நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சபையில் எடுக்கப்பட்ட கண்டன தீர்மானம் மற்றும் உறுப்பினர் லிங்கநாதனின் கடிதமும் வடக்கு முதல்வர் க.வி. விக்கினேஸ்வரனிடம் வழங்கப்பட்டது. அண்மையில் பிரதமருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க இருந்தனர். அவர்களூடாக பிரதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.எனினும் இதுவரை அரச அதிபருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இது குறித்து உறுப்பினர் சிவாஜிங்கம் தெரிவிக்கையில், அரச அதிபர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு அவை கோருவது இனவாதம் அல்ல . குறித்த அரச அதிபர் பெரும்பான்மையானவர் என்பதால் மாற்றுமாறு நாம் கேட்டகவில்லை. இது தமிழ் பேசும் ஒருவராக இருந்தால் கூட இவ்வாறு செய்யுமாறே வலியுறுத்துவோம்.
எந்த இனத்தவராக இருந்தாலும் தவறாக செய்பவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.