வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற கமநலசேவைகள் திணைக்களம் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –
வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதியில் கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 1997ஆம் ஆண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக குடியேறி தற்போது 52 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நிரந்தரமான வீடுகள், மின்சார வசதி, தொலைபேசி வசதி, நீர் விநியோகம் என அனைத்து வசதிகளும் இப்பகுதி மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இப் பகுதியில் மக்கள் நிரந்தரமாக வாக்குரிமையக் கூட பெற்று வாழ்ந்து வரும் நிலையில் தற்போது வவுனியா கமநலசேவைகள் திணைக்களத்தினர் அப்பகுதி நிலம் வவுனியா, வைரவபுளியங்குளம் குளத்திற்குரிய காணி எனவும் அதனை வழங்க முடியாது எனத் தெரிவித்து அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு எல்லைக் கல் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். தாம் குடியேறி வீடுகளைக் கட்டிய போது வேடிக்கை பார்த்துவிட்டு தற்போது அங்கிருந்து எம்மை வெளியேற்ற முயல்வதை ஏற்க முடியாது என மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் சார்பாக ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் –
நாங்கள் குளத்தின் அலைகரையை அண்டிய பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வசிக்கின்றோம். இதுதான் தற்போது எங்களுடைய பிள்ளைகளின் சொந்த இடம். இங்குதான் அவர்கள் பிறந்தார்கள். நாளாந்தம் கூலி வேலைகளைச் செய்து நிரந்தரமான வீடுகளையும் அமைந்துள்ளோம்.
அரசாங்கம் எமக்கு மின்சாரம், குடிதண்ணீர்,தொலைபேசி வசதி என்பவற்றை செய்து தந்துள்ளதுடன் வாக்காளர் அட்டைகளும் இப்பகுதி விலாசத்திலேயே உள்ளன. ஆனால் தற்போது கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இது குளத்திற்குரிய காணி எனத் தெரிவித்து எம்மை இங்கிருந்து வெளியேறுமாறும் கூறுகின்றனர்.
தற்போது புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறும் நிலையில் இவ்வாறு எம்மை வெளியேறுமாறு கூறி இப் பகுதியில் எல்லைக் கல் ஒன்றைப் போட முயல்கின்றனர். இதனால் எமது பிள்ளைகள் படிக்க முடியாது மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தேர்தல் நடைபெற்ற மறுதினமே இவ்வாறு எம்மை வெளியேற்ற எடுக்கப்படும் முயற்சிக்கு எதிராக தமிழர்பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இது தொடர்பில் மக்களை அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கமநலசேவை திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி உரிய தீர்வைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார்.