வவுனியாவில் கொள்வனவு செய்யும் அரிசியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்வதனால் யாழ். மாவட்ட நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசிகளில் கிலோ ஒன்றுக்கு 15 தொடக்கம் 20 ரூபாய் வரை இலாபம் வைத்தே விற்பனை செய்யப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அரிசி கொண்டு செல்லப்படுகின்ற போது, கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 சதம் போக்குவரத்து செலவு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் விற்கப்படுகின்ற அதிகரித்த விலையானது, மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கான இலாபம் என்றும் வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்தவகையில் வவுனியாவில் சிவப்பு ஆட்டக்காரி அரிசி ஒரு கிலோ 82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில், யாழ்ப்பாணத்தில் 90 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, சம்பா அரிசி வவுனியாவில் 78 ரூபாய்க்கும் யாழ்ப்பாணத்தில் 90 ரூபாய்க்கும், சிவப்பு பச்சை அரிசி வவுனியாவில் 70 ரூபாய்க்கும் யாழ்ப்பாணத்தில் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்து காணப்படும் அரிசி விலையேற்றம் வவுனியா அரிசி ஆலை வியாபாரிகளால் ஏற்பட்டது அல்ல எனவும் தாம் விற்பனை செய்யும் அரிசிகளை மொத்த வியாரிகளிடம் கொள்வனவு செய்யும் யாழ்ப்பாண சில்லறை வியாபாரிகள் அதிக இலாபம் ஈட்ட முயல்வதே இதற்கு காரணம் என்றும் வவுனியா அரிசி ஆலை வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியாவில் அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறியே, யாழ்ப்பாணத்தில் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.