வவுனியாவிலிருந்து புகையிரதம் கிளிநொச்சி வரை வந்தது

வடபகுதிக்கான புகையிரதப் பா தையை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதிக்கு புகையிரதத்தில்கொண்டு வரப்பட்டுள்ளது.பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற புகையிரதமொன்றிலேயே இப் பொருட்கள் கிளிநொச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மக்களுக்கு புகையிரதசேவையை விரைவாக வழங்குவதற்காக இப் பாதை அமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. இவ் வருட இறுதிக்குள் கிளிநொச்சிக்கு புகையிரத சேவையை வழங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இப் பாதை அமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான புகையிரத வீதியில் காணப்படுகின்ற பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் மிகவிரைவாக நடைபெற்று வருகின்றன. இப் புனரமைப்புப் பணிகளில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இப் புகையிரத வீதி அமைக்கப்பட்டிருந்த காணிகளில் குடியிருந்த கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதற்கான விசேட திட்டங்களையும் அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளனர். கடந்த கால யுத்தத்தின் பொழுது இப்புகையிரத வீதி முற்றுமுழுதாக இருந்த இடமே தெரியாமல் சேதமடைந்துள்ளது.மேலும் பாடசாலை மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் புகையிரத நிலையம் ஒன்றினை ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் அண்மையில் நாட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த புகையிரதம், அறிவியல் நகர் வரை வந்தடைந்தது. இது இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் புகையிரத சேவை ஆரம்பமாகும் என புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே புகையிரத நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக புகையிரத நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.புகையிரத பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெறுகின்றன.

Related Posts