வழி அனுமதி பெறாத பஸ்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள்

வழி அனுமதிப் பத்திரம் பெறாது வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பஸ்களுக்கு உயர் அதிகாரிகள் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இவ்வாறு கூறினார்.

யாழ்.மாவட்ட தனியார் பஸ் சாரதிகள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று பிராந்திய அலுவலகத்தில் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர் இந்தத் தீர்மானத்தை முன்வைத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
தனியார் பஸ்கள் யாழ்ப்பாணத்தில் மிக அதிகமான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றன. இது தொடர்பான முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணத்துக்குள் வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவான தனியார் பஸ்கள் வழி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொழும்பு, திருகோணமலை போன்ற இடங்களில் இருந்து வருகை தரும் அனுமதிப்பத்திரம் உடைய தனியார் பஸ்கள் குறித்த இடங்களில் மட்டுமே தரிக்க முடியும்.

பஸ்தரிப்பு நிலையங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியாது. பொதுமக்கள் தூர இடங்களில் இருந்து வருகை தரும் பஸ்கள் வேகமாக பயணிக்கும் என்பதால் அந்த பஸ்களில் ஏறுகிறார்கள். இதனை நாம் தடுக்க முடியாது. எனினும் பஸ் சாரதிகள் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்த சுற்ற றிக்கையின் படி சாரதிகள் செயற்பட வேண்டும். பொதுமக்களின் நலன்கருதி சேவைகளை வழங்க வேண்டும்.

வழி அனுமதிப் பத்திரம் பெறாமல் சாரதிகள் பஸ்களைச்சேவையில் ஈடுபடுத்த வேண்டாம். வழி அனுமதிப் பத்திரத்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்து உரிய அனுமதிப் பத்திரம் பெற்ற பின்னர் போக்குவரத்து சேவையில் ஈடுபடலாம்.

தற்போது போதிய எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் உள்ளன. இதனால் பஸ் உரிமையாளர்கள் புதிய பஸ்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம். இருக்கக் கூடிய பஸ்களை சேவையில் சரிவர ஈடுபடுத்த முன்வரவேண்டும்.

பஸ் சேவை இடம்பெறாத இடங்களுக்கு சேவை வழங்க முன்வந்தால் உடனடியாக வழி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும். எனவே பஸ் சாரதிகளோ, நடத்துநர்களோ முரண்பாடு இல்லாமல் மக்களுக்கான போக்குவரத்துச் சேவையை சரிவர வழங்க முன்வரவேண்டும் என்றார்.

Related Posts