வழிபாடுகளில் கலந்துகொள்ள இராணுவம் அனுமதி

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி இராஜஇராஜேஸ்வரி ஆலயத்தில் தைப்பூச திருநாளான செவ்வாய்க்கிழமை (03) பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதியளித்தனர்.

இராணுவ சோதனை சாவடியில் இருந்து இராணுவத்தினரின் பஸ்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

பொதுமக்களுடன் இணைந்து யாழ். மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

1990 ஆம் ஆண்டு இப்பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்த பின்னர், இந்தப் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு மக்கள் சென்று வரமுடியாது இருந்தமையால் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளும் கைவிடப்பட்டன.

2002 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் இராணுவத்தினரின் அனுமதியுடன் இந்த ஆலயத்தில் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அதுவும் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவரும் அங்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 26ஆம் திகதி மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலாவுடன் சென்ற பொதுமக்கள் சிலர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தைப்பூசத்தன்றும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

Related Posts