வழக்குத் தீர்ப்பானது முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பத்து ஆண்டுகளின் பின்னர் ரவிராஜின் குடும்பத்தினர் முதல் தடவையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பிலான வழக்குத் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து பேரும் குற்றமற்றவர்கள் என அளிக்கப்பட்டிருந்த தீர்ப்பு தொடர்பில் சட்ட பட்டதாரியான ரவிராஜின் புதல்வி பிரவீனா ரவிராஜூம், மனைவி சசிகலா ரவிராஜூம் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியராக சசிகலா கடமையாற்றி வருகின்றார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் நீதி கிட்டும் என பெரிதும் எதிர்பார்த்ததாகவும் எனினும், வழக்குத் தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தந்தையின் படுகொலையாளிகள் என நம்பப்படுவோர் சுதந்திரமாக வெளியே உலவுவது முதுகில் குத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக ரவிராஜின் புதல்வி பிரவீணா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் சட்டம் பயின்ற தாம் இலங்கையின் சட்டத்துறையில் தொழில் ஒழுக்க விதிகள் பின்பற்றப்படாத காரணத்தினால் சட்டத்துறையில் தொழில் செய்ய விரும்பவில்லை எனவும் அதற்கு பதிலாக சந்தைப்படுத்தல் துறையை தெரிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தமது தாயாருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் வெள்ளை சாரி அணியத் தயாரா என கேட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கணவரின் கொலைக்கு நியாயம் கிட்ட வேண்டும் என்பதே தமது நோக்கமாக அமைந்தது என தெரிவித்துள்ள சசிகலா ரவிராஜ் வெறுமனே வழக்கு விசாரணை செய்து முடிவுறுத்துவதென்றால் வழக்கினை விசாரணை நடத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.