வழக்கில் பிணை: வெளியில் கத்திக்குத்து : முகப்புத்தக நட்பு காரணம்!

வழக்கொன்றில் பிணை பெற்று சென்றுகொண்டிருந்த சந்தேகநபர் மீது கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள வீதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் பலியானதுடன் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்விப்பயிலும் 17 வயதான யுவதியை கடத்திசென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஓகஸ்ட் 19ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த எடொன் நிரோஷன் (வயது 25) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு கொழும்பு- இலக்கம் 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றம், சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

சந்தேகநபரை நேற்றய தினம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே சென்ற சந்தர்ப்பத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான 51 வயதான முத்தையா செல்வராஜ் என்பவர், சந்தேகநபரின் தந்தையான 61 வயதான ஜி.ஏ. ஜேசீலன் என்பவரையும் சந்தேகநபரான எடொன் நிரோஷன் என்பவரையும் அவருடைய சகோதரியான தில்ஷாவையும்( வயது 23) கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், இளைஞனின் தந்தை பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் யுவதியின் தந்தையான முத்தையா செல்வராஜ் வாழைத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அந்த யுவதியை முகப்புத்தகம் (பேஸ் புக்) ஊடாக நண்பராக்கி கொண்டதுடன் யுவதியை கடத்திச்சென்று நிர்வாணமாக படம்பிடித்துள்ளார்.

அந்த படத்தை முகப்புத்தகத்தில் தரவேற்றம் செய்யபோவதாக தொலைபேசியூடாக அச்சுறுத்தியே யுவதியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts