நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (10) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வட மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.