வளலாய் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வளலாய் மீள்குடியேற்ற சங்கத்தலைவர் செல்லப்பு துரைரட்ணம், புதன்கிழமை (01) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
1990ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் மூடப்பட்ட இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் வளலாய் பகுதி மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை தமது கிராமத்திலேயே மேற்கொள்ள முடியும்.
பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவுடன், கலந்துரையாடி ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
வளலாய் அமெரிக்க மிசன் பாடசாலையில் கல்வி கற்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள், அச்சுவேலி மத்திய கல்லூரியில் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும். பதிவுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தற்காலிகமாக ஒரு வீட்டில் பாடசாலையை மீள ஆரம்பிக்க முடியும்.
அமெரிக்க மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் தரம் 1 முதல் க.பொ.த சாதாரண தரம் வரையில் வகுப்புக்கள் உண்டு. இடப்பெயர்வின் பின்னர், இந்தப் பாடசாலை முற்று முழுதாக சேதமடைந்தது.
வளலாய் மேற்கு பகுதியில் 2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்தபோதும், பாடசாலை இயங்காமையால் வளலாய் மாணவர்கள் அச்சுவேலி மத்திய கல்லூரி மற்றும் இடைக்காடு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.