கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 181 குடும்பங்கள் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் ம.பிரதீபன் திங்கட்கிழமை (30) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
வளலாய் பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மக்கள் தற்போது தமது காணிகளை துப்பரவு செய்கின்றனர். அவர்களுக்கு உடனடி தேவையான கத்தி, கோடாரி, குப்பைவாளி போன்ற உபகரணங்களை 50 குடும்பங்களுக்கு வழங்கினோம்.
காணி உறுதி வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு துப்பரவு பணிக்கு என தலா 13 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. மக்கள் கோரிக்கைக்கு அமைய 1000 லீற்றர் கொள்ளவுடைய 5 நீர்த்தாங்கிகள் மூலம் நீர் விநியோகம் செய்து வருகின்றோம் என்றார்.